மும்பை,-மஹாராஷ்டிராவில், லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர்.
மஹாராஷ்டிராவில், ரத்னகிரி மாவட்டத்தின் ஹெட்வி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், மும்பை - கோவா நெடுஞ்சாலையில் நேற்று காரில் சென்ற போது, எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் உருக்குலைந்து, சின்னாபின்னமானது.
இதில் பயணித்த ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக பலியாகினர். பலத்த காயமடைந்த மற்றொரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.