திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி வைபவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை, தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தீர்த்தவாரியில் திருவண்ணாமலை உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்ட அண்ணாமலையார், நேற்று மதியம் 12:30 மணிக்கு மணலுார்பேட்டை வந்தடைந்தார்.
மணலுார்பேட்டை மாவடி விநாயகர், பிரயோக வரதராஜ பெருமாள், அகஸ்தீஸ்வரர், கெங்கையம்மன், மாரியம்மன், சித்தப்பட்டினம் லட்சுமி நாராயண பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள் மேள தாளங்கள் முழங்க அண்ணாமலையாரை வரவேற்று, தென்பெண்ணை ஆற்றிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி முடிந்து, சிறப்பு பந்தலில் சுவாமி எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். எஸ்.பி., மோகன்ராஜ் மேற்பார்வையில், ஏ.டி.எஸ்.பி., ஜவகர் தலைமையில், டி.எஸ்.பி.,க்கள் திருமேனி, பழனி உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.