திட்டக்குடி : ராமநத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதியதில் மூதாட்டி இறந்தார்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று (டிஎன்01 ஏஎன்3129) திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3:00 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தனபால் ஓட்டினார்.
கடலூர் மாவட்டம், ஆவட்டி குறுக்கு ரோடு அருகே பஸ் வந்தபோது, பட்டாக்குறிச்சியைச் சேர்ந்த ராமர் என்பவர் தனது மொபட்டில் சாலையை கடக்க முயன்றார். திடீரென்று மொபட் குறுக்கே வந்ததால், அரசு பஸ்சின் டிரைவர் மொபட்டில் லேசாக மோதிய நிலையில், பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதில் அரசு பஸ், சென்டர் மீடியனை கடந்து சாலையின் மறுபுறம் சென்றது.
அப்போது, எதிர்புறத்தில் வந்த டாடா செஸ்ட் காருடன் (டிஎன்24 ஏஇசட்1778) அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த டிரைவர் திருச்செந்தூர், மேலப்புதுக்குடியைச் சேர்ந்த ராஜேஷ், 31, பயணம் செய்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, 65, அவரது கணவர் சேர்மதுரை, 70, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த ராமநத்தம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ராமர் மற்றும் கார் டிரைவர் ராஜேஷ் வேப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஜெயலட்சுமி மற்றும் சேர்மதுரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில், ஜெயலட்சுமி மாலை 5:45 மணியளவில் இறந்தார். சேர்மதுரை, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.