விழுப்புரம்: 'தமிழ்நாடு என்ற பெயர் ஸ்டாலின் தலைமையிலான போதை நாடு என்று பெயர் மாறிவிட்டது' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.
விழுப்புரத்தில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க.,வினர் திராவிட மாடல் என சொல்லிக் கொள்கின்றனர். எம்.ஜி.ஆர்., இல்லை என்றால் திராவிட கழகம் இல்லை. கருணாநிதி இல்லை. ஸ்டாலின் இல்லை. எம்.ஜி.ஆர்., தான் திராவிடத்திற்கு அடித்தளம் போட்டவர்.
தற்போது ஸ்டாலின், உதயநிதி மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் தான் திராவிட மாடல். வேறு யாரும் இல்லை. ஆட்சி நடக்கிறதா என்றால் இல்லை. இரண்டு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் இந்த ஆட்சி முடிந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், ஏதாவது திட்டங்கள் அறிவித்துள்ளாரா. மக்களுக்கு தேவையான புதிதாக அல்லது சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
இருப்பது கொஞ்ச காலம் ,எவ்வளவு கொள்ளையடிக்கலாம் எனபதுதான் அவர்களின் சிந்தனை. நாட்டில் என்ன நடக்கிறது, அமைச்சரவையில் என்ன நடக்கிறது என ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றனர். ஆனால், ரத்து செய்யவில்லை. இதனால், ஆண்டிற்கு 20 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவு பூர்வமாக சிந்தித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை கவர்னர் ஒப்புதல் இல்லாமல் கொண்டு வந்தவர் பழனிசாமி.
நாட்டில் தற்போது சட்டம், ஒழுங்கு சரியில்லை. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு என்ற பெயர் மாறி ஸ்டாலின் தலைமையிலான போதை நாடாக மாறியுள்ளது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா, அபின், போதை மாத்திரை, போதை ஊசி, போதை சாக்லெட் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதனால், மாணவர் மற்றும் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
தொழில் துறையில் பின்நோக்கிச் செல்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலையில்லை.
இந்த அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் எந்த பணிகளும் செய்யவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தாமல் ரத்து செய்துவிட்டது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசினார்.