வானுார்: ஆரோவில் பகுதியில் தனியார் இடத்தில் வேலி அமைத்த பிரச்னை தொடர்பாக, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 16 வெளிநாட்டினர் உட்பட 32 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சுப்ரமணி. இவர், ஆரோவில்லில், இடையஞ்சாவடி - குயிலாப்பாளையம் சாலை இடையே சாலையோரம் இடம் வாங்கியுள்ளார்.
அந்த இடத்தில் கடந்தாண்டு வேலி அமைத்தார். ஆரோவில் பகுதியில் தனிநபர் வாங்கிய இடத்தில் வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆரோவில்வாசிகள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். மேலும், ஒரு சிலர் வேலி அமைக்க போடப்பட்ட கான்கிரீட் சிமென்ட் துாண்களை உடைத்தனர்.
இது குறித்து இடத்தின் உரிமையாளர் சுப்ரமணி, வானுார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவத்தன்று. சுப்ரமணிக்கு சொந்தமான இடத்தில் கான்கிரீட் கற்களை சேதப்படுத்தியது. சட்ட விரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தது, நிலத்தின் உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளில், சத்தியசீலன், கமலக்கண்ணன், ராஜா, செல்வராணி, ரேணு, அருள், வள்ளி, மணியப்பிள்ளை, நடாஸ், சுக்ரீத், பிடரிக், வீரா, டோமு, மிசல், லுாடு, எரிக், குந்தவை, அரவிந்த், ஹெலன், இவான், ராஜூ, அமீர், டாமர், அருள், காளிப், பாஸ்டியான், பெட்டினா, தேவ் கிருஷ்ணா, யுவான், அனஸ், இலினா என 16 வெளிநாட்டினர் உட்பட 32 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட 32 பேரும், ஆரோவில் வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.