விழுப்புரம் : 'மக்கள் அனைவருக்கும் சமமான, தரமான நீதி கிடைக்க வேண்டும்' என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில், மத்திய, மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் நேற்று நடந்த மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சட்ட உதவி மைய துவக்க விழாவில், அவர் பேசியதாவது:
மத்திய, மாநில சட்டப்பணிகள் ஆணையக் குழுவினர் இணைந்து இலவச சட்ட உதவிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்த விழாவில் அனுபவம் மிக்க நீதிபதிகள், வழக்கறிஞர்களுடன், சட்டக் கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றுள்ளது, எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பல்வேறு அரசு துறைகள் மூலம் கண்காட்சியும், நல உதவிகளும், சட்ட உதவியும் வழங்கப்படுகிறது.
வசதியுள்ளவர்கள், தங்களின் வழக்குகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவர். ஆனால், கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மக்கள், சட்ட உதவிக்காக ஏங்குகின்றனர். அவர்களுக்காகவே, மத்திய, மாநில அரசுகள் சட்ட உதவி மையங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது.
ஏழை மக்கள், ஆதரவற்ற பெண்கள் என சட்ட உதவி தேவைப்படுவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சட்ட உதவி மையங்கள் வாயிலாக உதவி செய்து வருகிறது.
மக்கள் அனைவருக்கும் தரமான, சமமான நீதி கிடைக்க வேண்டும். வழக்குகள் முடிக்கப்படுவது பெரிதல்ல. அந்த வழக்குகளில் தரமான நீதி கிடைக்க வேண்டும். அதில், சில தவறுகள் நடக்கும்போது, நீதி கிடைக்கவில்லை என பேசப்படுகிறது.
நாட்டில் உள்ள பழமையான நீதிமன்றங்களில், சென்னை உயர் நீதிமன்றமும் அடங்கும். இங்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதி காலிப் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும். கொலிஜியமும், சட்டத்துறை அமைச்சகமும் இணைந்து சிறப்பாக செயல்படுகிறது.
விரைவான நீதி கிடைப்பதற்கு மாற்று முறைத் தீர்வு மையங்களையும் உருவாக்கியுள்ளோம். பல்வேறு தீர்ப்பாயங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
நாடு 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. 2047ம் ஆண்டில் இந்தியா தனது நுாற்றாண்டை கொண்டாடும்போது, அனைத்திலும் வளர்ச்சி பெற்றதாக இருக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார்.