பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, அரசு பஸ் டிரைவரின் தாயின் துக்க நிகழ்ச்சிக்கு வந்த போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர்.
பெண்ணாடம் அடுத்த கார்மாங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். விருத்தாசலம் பணிமனையில் டிரைவராக உள்ளார். இவரது தாய் நேற்று முன்தினம் இறந்தார்.
நேற்று மாலை இறுதி ஊர்வலம் என்பதால், உடன் பணிபுரியும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டை சேர்ந்த டிரைவர் கல்யாணகுமார், 49, கம்மாபுரம் அடுத்த பெரிய கோட்டுமுளையை சேர்ந்த கண்டக்டர் ஜெயராஜ், 34, ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டையை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர் அண்ணாதுரை, 54, ஆகியோர் அஞ்சலி செலுத்துவதற்காக வெடி வாங்கி வந்தனர்.
அங்கு ஏற்கனவே சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இவர்கள் வாங்கி வந்த வெடியில் தீப்பொறி பட்டதில் அனைத்து வெடிகளும் வெடித்தன.
அதில், போக்குவரத்து தொழிலாளர்கள் மூவரும் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தனர். ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், சம்பவம் குறித்து விசாரித்தனர். இறுதிச் சடங்கின்போது 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.