மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில், ரஷ்ய-இந்திய நல்லுறவை வெளிப்படுத்தும், கலாசார நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி மாணவர்கள் ரஷ்ய நாட்டின், கலாசார நடனம் குறித்து தெரிந்து கொள்ள நடந்த இந்நிகழ்ச்சியில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, 20 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, கலாசார நடனங்களை ஆடினர்.
பொங்கலுக்கு வெளியான, 'வாரிசு' படப்பாடலான, 'ரஞ்சிதமே...' பாடலுக்கு, ரஷ்ய நாட்டு பெண் கலைஞர்கள், பாவாடை, தாவணியில் குத்தாட்டம் ஆடினர். மாணவர்கள் கரகோஷம் எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்திய-ரஷ்ய நாட்டு கலாசாரத்தை மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூற, தமிழகத்தில் 20 ஆண்டுகளாக சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் ரஷ்ய கலைஞர்கள் கலாசார நடன நிகழ்ச்சியை நடத்தி வருவதாக, கலாசார குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார். ரஷ்ய கலைஞர்களை, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினர்.