-நமது நிருபர்-
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், டெண்டர் விட்டும் பணிகளைத் துவங்க முடியாத அளவுக்கு, பிற துறையினர் ரோடுகளை ஒப்படைக்காமல் இழுத்தடிப்பதாக, நெடுஞ்சாலைத்துறையினர் குமுறுகின்றனர்.
கோவை மாநகரில் ரோடுகள் தற்போதுள்ள மோசமான நிலையில், தேர்தல் நடந்தால் ஆளும்கட்சி மீண்டும் படுதோல்வி அடைவது நிச்சயம்.
அந்தளவுக்கு மக்கள் படுகோபத்தில் உள்ளனர். மாநகராட்சி ரோடுகளுக்கு 'புலி வருது' கதையாக நிதி வராமல் இழுப்பதால், அவற்றின் நிலை மிக மோசமாகவுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான, முக்கியமான 16 ரோடுகளுக்கு, கடந்த ஆண்டே நிதி ஒதுக்கி, டெண்டரும் விடப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலான ரோடுகளில் இன்னும் பணியே துவங்கவில்லை.
இதனால் எந்த ரோட்டில் போனாலும், புழுதிப்படலமாகக் காட்சியளிக்கிறது. அதிலும், சுந்தராபுரம் - மதுக்கரை ரோடு, குறிச்சி - போத்தனுார் ரோடு, வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு, இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் ரோடு, வீரகேரளம் ரோடு என, அதிக போக்குவரத்து நிலவும் ரோடுகளின் நிலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கவலைக்கிடமாகவுள்ளது.
கடந்த ஓராண்டில், இந்த ரோடுகளில் தினமும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், சுவாசப் பிரச்னை, முதுகுத்தண்டு பாதிப்பு, இடுப்பு வலி, உடல் சோர்வு என பல விதமான துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ரோடு சீரமைப்புப் பணியைத் துவங்காமலிருப்பதற்கான காரணங்களை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம்கேட்டால், ஒவ்வொரு ரோட்டிலும் பிற துறையினரால் நடந்து வரும் பணிகளை அடுக்குகின்றனர்.
சுந்தராபுரம் சந்திப்பிலிருந்து, மதுக்கரை செல்லும் ரோட்டில், 1.8 கி.மீ., துாரமுள்ள ரோடு ரூ.10 கோடியே இரண்டு லட்சம் மதிப்பிலும், குறிச்சி பிரிவிலிருந்து போத்தனுார் சந்திப்பு வரை 2.6 கி.மீ., ரோடு, ரூ.12 கோடியே 99 லட்சம் மதிப்பிலும் நான்கு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளன.
கடந்த நவம்பரில், சுந்தராபுரம் - மதுக்கரை ரோடு பணிகளைத் துவக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் துவக்கியபாடில்லை. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால், இரண்டு ரோடுகளிலும் சீரமைப்புப் பணி துவங்கவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.
அதேபோன்று, வடவள்ளி - இடையர்பாளையம், இடையர்பாளையர் - கவுண்டம்பாளையம் ரோடுகளில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், வீடுகளுக்கு பைப் லைன் காஸ் குழாய் பதிக்கும் பணி, முடித்துத் தரப்படாததால் பணிகள் துவங்கவில்லை.
இந்த ரோடுகளில், மழை நீர் வடிகால் பணிகளை, நெடுஞ்சாலைத் துறையினர் 90 சதவீதம் முடித்து விட்டனர்.தடாகம் ரோட்டில், பில்லுார் 3வது குடிநீர்த் திட்டப் பணிகளின் குழாய்களைப் பதிக்கும் பணியை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முடித்துத் தராததால், அங்கும் பணிகளைத் துவக்க முடியவில்லை.
இவ்வாறு பல்வேறு துறையினரும், ஆளுக்கு ஆள் குழிகளைத் தோண்டிக் கொண்டே இருப்பதால், ரோடு சீரமைப்புப் பணியைத் துவக்க முடியாமல், நெடுஞ்சாலைத்துறையினர் கடும் விரக்தியில் உள்ளனர்.
ஏனெனில், மோசமான ரோடுகளில் தினமும் பயணிக்கும் பொது மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைத்தான் கொடுஞ்சொற்களால் வசை பாடுகின்றனர்.
இந்த பணிகளை, மற்ற துறையினர் எப்போது முடிப்பார்கள், இவர்கள் எப்போது சீரமைப்புப் பணியைத் துவக்குவார்கள் என்று, கோவை மக்கள் கொந்தளிப்போடு கேட்கிறார்கள்.
இதற்கு, தனது உடனடி செயல் வாயிலாக பதில் கூறும் பொறுப்பு, மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கே உண்டு!