பொள்ளாச்சி:கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, ரயில்வே பயணியர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகலரயில்பாதை பணிகள் முடிந்து, 2017ல் கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் திறக்கப்பட்டது. தற்போது, கோவை- -- பொள்ளாச்சி பயணியர் ரயிலும், கோவையில் இருந்து மதுரை செல்லும் பயணியர் ரயிலும் இயங்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரயில்கள் மற்றும் கூட்ஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஆனால், ஸ்டேஷனில் ஒரு நடை மேடையில் இருந்து, மற்றொரு நடைமேடைக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை. ஸ்டேஷனிலும், அடிப்படை வசதிகள் இல்லை.
கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இரண்டு நடைமேடைகளிலும், மின்விசிறிகள் இல்லாததுடன், பயணியர் காத்திருப்போர் அறையும் இல்லை.
அதேபோல், நடைமேம்பாலம் கட்டப்படாததால், பயணியர் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு, ரயில்வே தண்டவாளங்களை கடந்தே, செல்ல வேண்டியுள்ளது. வெளியூர் செல்லும் ரயிலுக்கு, பயணசீட்டு முன்பதிவு செய்வதற்காக, கோவை, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணியர் செல்ல வேண்டியுள்ளது.
இணையதளம் வழியாக முன்பதிவு செய்தால், அதிகளவில் பயணசீட்டு முன்பதிவு செய்ய முடியாமல், காத்திருப்போர் பயணசீட்டுகளே கிடைக்கிறது.
தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனித்து, நடைமேம்பாலம் மற்றும் காத்திருப்போர் அறைகள் கட்டுவதுடன், நடைமேடைகளில் மின்விசிறிகள் பொருத்தி, புதிய முன்பதிவு மையத்தையும் திறக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.