சுருளி அருவி அருகே வண்ணாத்திபாறை அடர்ந்த வனப்பகுதிக்குள் சுருளியாறு நீர்மின்நிலையம் உள்ளது. 35 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஒரு ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே அதிக உயரத்திலிருந்து 971 மீ., உயரத்திலிருந்து தண்ணீரை இறக்கி மின் உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடம் பெறுகிறது.
மேகமலையில் சேகரமாகும் நீரை ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு அணைகள் வழியாக இரவங்கலாறு அணையில் சேகரித்து, அங்கிருந்து 2900 மீ., நீளமுள்ள குழாய் மூலம் கீழே நீரை இறக்கி மின் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த 2021 செப்டம்பர் 4 ல் தண்ணீர் கொண்டு வரும் குழாய் உடைந்தது. இதனால் 16 மாதங்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. வாரியம் மதிப்பீடுகள் தயார் செய்து ஒப்பந்தபுள்ளி இறுதி செய்தது. ஆனால் வேலை துவங்க வனத்துறை அனுமதி வேண்டும். புலிகள் காப்பகமாக மாறி உள்ளதால், டில்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு முகமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று வனத்துறை கூறியது. மின்வாரியத்தின் தொடர் முயற்சியால் அனுமதி பெறப்பட்டு, தற்போது உடைந்த குழாய்கள் சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது.
இது குறித்து மின்வாரியங்களில் விசாரித்த போது, 2900 மீட்டர் நீளமுள்ள குழாய் லைனில் 220 மீட்டர் சேதமடைந்த பகுதிகளை மட்டும் தற்போது புதுப்பிக்கப்படுகிறது. அத்துடன் 2900 மீட்டர் நீளமுள்ள பைப் லைன் முழுவதும் உள்ளேயும், வெளியேயும் பெயிண்டிங் பணிகள் நடக்க உள்ளது.
மே மாதத்திற்குள் பணி முடித்து, மின் உற்பத்தியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.