புதுச்சேரி : புதுச்சேரிக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு தகவல்களை கொடுப்பதற்காக 'பாட்' செயலியை அறிமுகப்படுத்த சுற்றுலா வளர்ச்சி கழகம் ரெடியாகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்தியாவிலேயே அதிகம் தேடப்படும் நகரம் பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்து இருந்தது. எனவே சுற்றுலாவை மேம்படுத்தி அதிகளவு வருவாயை ஈட்டுவதற்கு புதுச்சேரி சுற்றுலாத்துறை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதையொட்டி, மத்திய அரசின் திட்ட நிதியின் கீழ் புதுச்சேரியில் மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி மெரினா, வீராம்பட்டிணம், நல்லவாடு ஈடன் பீச் உள்பட 9 கடற்கரை பகுதிகளில் சுற்றுலாவிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அடுத்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விரல் துனியில் தகவல்களை கொடுப்பதற்காக 'பாட்' எனப்படும் பிரத்யோக செயலியை புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் ரெடி செய்து வருகிறது.
இந்த 'பாட்' செயலியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே,, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து சுற்றுலா பகுதிகளும் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாருடைய உதவியின்றி இந்த செயலி மூலம் தங்களுக்கு தேவையான தகவல்களை நொடியில் பெற்று அந்த இடத்தினை அடைய முடியும்.
உதாரணத்திற்கு கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் புதுச்சேரிக்கு வர விரும்பினால், அவர் இந்த தளத்தின் 'க்யூ ஆர் கோடை ஸ்கேன்' செய்து, 'ஹாய்' என தட்டினால், உடனடியாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என தகவல் கேட்கும். நீங்கள், நான் கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு எப்படி வரலாம், நகரில் எங்கு நல்ல உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளது, வாடகை கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களின் தேவை உள்ளிட்ட தொடர்பு எண்களை காட்டும். இது மட்டுமின்றி அருகில் உள்ள தமிழகப் பகுதி சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன,
சுற்றுலா பயணிகளின் அனைத்து தேவைகளுக்கான தகவல்களை செயற்கை நுண்ணறிவால் இயங்கும் 'பாட்' செயலி உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், புதுச்சேரி மாநிலத்தில் பிரபல சாலையோர கடைகள், உட்பட தங்கும் மற்றும் உணவு விடுதிகள் வாடகை, வாகனங்களின் விபரங்கள் இடம் பிடிக்க உள்ளதால் அவற்றின் பெயர், தொடர்பு எண் ஆகியவை சேர்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த செயலியை வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்பட 33 வகையான சமூக வலைதளங்கள் மூலம் எளிதில் அணுகும்படி வடிமைக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 15 மொழிகளில் தகவல்களை பெற முடியும். ஏப்ரல்-15ம் தேதி இந்த செயலியை அறிமுகப்படுத்த சுற்றுலா வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும்,'பாட்' செயலியை சுற்றுலாப் பயணிகள் தொடர்பு கொள்ளும் வகையில் நாடு முழுவதும் 'க்யூ .ஆர் கோடை ஸ்கேன்' செய்ய வசதியாக ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஜருராக நடந்து வருகிறது.