உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சித்தனக்காவூரில் இருந்து, அன்னாத்துார் வழியாக செங்கல்பட்டுக்குச் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலையில், சித்தனக்காவூர் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
சித்தனக்காவூர், தண்டரை, பேரணக்காவூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து செங்கல்பட்டு, சாலவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இந்தப் பேருந்து நிறுத்தத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டியப் பயணியர் நிழற்குடை, கடந்த 5 ஆண்டுகளாக பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இக்கட்டடத்தின், மேற்கூரையின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து இரும்பு கம்பிகள் தாங்கி நிற்கிறது.
இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில், நிழற்குடைக்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.