திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலின், 29 உபகோவில்களை, மூன்று கோவில்களின் தலைமைக்கு கீழ் பிரித்து, ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. இதற்காக தற்போது ஒரு கூடுதல் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக முருகன் கோவில் விளங்குகிறது.
இந்த முருகன் கோவிலுக்கு, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், பெரியநாகபூண்டி நாகேஸ்வரர், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் உள்பட மொத்தம், 29 உபகோவில்கள் உள்ளன.
திருத்தணி முருகன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம், எட்டு உபகோவில்களில் மதிய உணவுத் திட்டம் ஆகியவை செயல்படுகின்றன.
மேற்கண்ட அனைத்து திட்டங்கள், மற்றும் வருவாய் இனங்கள் ஆகியவற்றை திருத்தணி முருகன் கோவிலின் தணிகை தேவஸ்தான விடுதிகள் அருகே இயங்கி வரும் தலைமை அலுவலகம் மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஹிந்து அறநிலையத் துறை ஆணையருக்கு முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களை மூன்றாக பிரித்து உபகோவில்களை இணைக்க அனுமதி வேண்டும் என 2019ம் ஆண்டு திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் இருந்து பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது திருத்தணி முருகன் மற்றும் அதன் உபகோவில்களை மூன்றாக பிரித்து செயல் அலுவலர் நியமித்து பராமரிப்பதற்கு ஹிந்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதாவது திருத்தணி முருகன் கோவிலுடன், 15 கோவில்களும், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுடன், ஏழு கோவில்களும், மத்துார் மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவிலுடன், ஏழு கோவில்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்காக தற்போது ஒரு செயல் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும், புதியதாக பிரிக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு தேவையான ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இனிவரும் நாட்களில், அந்தந்த கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்த கோவிலின் தலைமையிடம் தான் சம்பளம் மற்றும் வரவு- செலவு கணக்கு சரிபார்க்கப்படும்.
இது குறித்து திருத்தணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா கூறியதாவது:
முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்கள் மூன்றாக பிரிப்பதால் கோவில்கள் வளர்ச்சி அடையும். அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்யலாம். கோவிலின் வருவாய் பெருக்க முடியும்.
புதிய செயல் அலுவலர்கள் பணியிடம் வருவதால், தற்போது அந்தந்த கோவில்களின் ஆவணங்கள், நிலம் சம்மந்த ஆவணம், தங்க நகைகள், வங்கிக் கணக்குகள் ஆகியவை, முருகன் கோவில் தலைமை அலுவலகத்தில் இருந்து மூன்று செயல் அலுவலர்களிடம் விரைவில் ஒப்படைப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.