உத்திரமேரூர்:வாடாதவூரில், கால்நடை மருந்தகம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி கால்நடைப் பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாடாதவூர், கடல்மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவிலான கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமங்களில், மேய்ச்சல் நிலங்கள் அதிகம் என்பதால், ஆடு, மாடுகள் வளர்ப்பில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, வாடாதவூர் கிராமத்தில் மட்டும் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், இக்கிராமப் பகுதிகளில் நாட்டுக் கோழிகள் வளர்ப்பிலும், கால்நடைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.
இவ்வாறு, கால்நடைகள் அதிகம் உள்ள இக்கிராமங்களுக்கு, கால்நடை மருந்தகம், அருகாமையில் இல்லை என கிராம வாசிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வாடாதவூர் கிராம கால்நடை பராமரிப்பாளர்கள் கூறியதாவது:
வாடாதவூர் கிராமத்தில், கால்நடை பராமரிப்பு பிரதான தொழிலாக உள்ளது.
ஆனால், இப்பகுதிக்கான கால்நடை மருந்தகம், 3 கி.மீ., துாரத்தில் உள்ள குண்ணவாக்கத்தில் அமைந்துள்ளது.
இதனால், இக்கிராமங்களில் உள்ள கால்நடைகள், நோய்வாய்ப்படும் நேரங்களில், உடனுக்குடன் மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
கால்நடைகளை அவ்வளது துாரத்திற்கு அழைத்து செல்ல இயலாத நிலையில், மருத்துவர்களை அழைத்தாலும், அவர்கள் உடனடியாக வந்து சிகிச்சை அளிப்பதில்லை.
இதனால், கால்நடைகள் சில சமயங்களில் பரிதாபமாக இறக்க நேரிடுகிறது. எனவே, இக்கிராமத்தில், புதியதாக கால்நடை மருந்தகம் ஏற்படுத்த சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement