உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர், கரும்பாக்கம், சீத்தாவரம், பழவேரி, அருங்குன்றம், திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தின் கடைகோடியில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் மற்றும் இக்கிராமங்கள் வழியாக அரும்புலியூர் வரை தடம் எண் டி55 ஏ., என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
காலை, மதியம், மாலை என 3 வேளைகள் இப்பேருந்து இயங்கி வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, மதியம் 12:30க்கு, காஞ்சிபுரத்தில் புறப்பட்டு, 1:30 மணிக்கு, அரும்புலியூர் வந்து சேர வேண்டிய பேருந்தின் சேவை அறிவிப்பு ஏதுமின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், பல வகையில் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அரும்புலியூர் சுற்று, வட்டார கிராமவாசிகள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, சீத்தாவரம் கிராம மக்கள் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழித்தடத்தில், 55ஏ தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயங்குகிறது. அரும்புலியூர் சுற்று வட்டார கிராம மக்களுக்கு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர இந்த ஒரு பேருந்துதான் போக்குவரத்து ஆதாரமாக உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் இப்பேருந்து மூலம்தான் கல்விக்கூடங்களுக்கு சென்று வீடு திரும்புகின்றனர். இந்நிலையில், மதிய நேரத்தில் இப்பேருந்து சேவையை நிறுத்தம் செய்திருப்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனைக்கு சென்றுவர, விவசாயத்திற்கான விதை, உரம், மருந்து உள்ளிட்டவை வாங்கி வர மதிய நேரத்தில் போக்குவரத்து வசதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக இயங்கும் இப்பேருந்து சேவையை தொடர்ந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.