காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமம், கீழாண்டை தெருவில், பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. மிகச்சிறிய அளவில் இருந்த இக்கோவிலை புதுப்பித்து பெரிய அளவில் கோவில் கட்ட, கோவில் திருப்பணிக் குழுவினர், கீழாண்டை தெரு நாட்டாண்மைதாரர்கள் மற்றும் கூரம் கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் புதிய கோவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் 11ல் நடைபெறுவதாக கும்பாபிஷேகம் 'மாண்டஸ்' புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 26ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, வரும் 25ல் காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நுாதன பிம்பங்கள் கரிக்கோலமும், மாலை 4:00 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை உள்ளிட்டவையும் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக தினமான வரும் 26ல், காலை 9:30 மணிக்கு குடம் புறப்பாடும், தொடர்ந்து நுாதன கோபுர விமானம், விநாயகர், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10:30 மணிக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.