புதுடில்லி:உலகளவில் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில், இரண்டாவது இடத்தை, முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
இவர், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளாவை பின்னுக்குத் தள்ளி, அவருடைய இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
'பிராண்டு பைனான்ஸ்' நிறுவனம், நடப்பாண்டுக்கான 'பிராண்டு கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023' பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தை முகேஷ் அம்பானி கைப்பற்றி உள்ளார்.
அத்துடன் 'டாப்'10 அதிகாரிகள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.
முதல் 10 பேரில், 'என்விடியா'-வின் ஜென்சன் ஹுவாங் முதல் இடத்தையும், 2வது இடத்தை 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானியும் பெற்றுள்ள நிலையில், 3வது இடத்தில் சத்ய நாதெள்ளா உள்ளார்.
இவரையடுத்து, 'அடோப்' நிறுவனத்தின் சாந்தனு நாராயண் 4வது இடத்திலும், 'கூகுள்' சுந்தர் பிச்சை 5வது இடத்திலும், 'டெலாய்ட்' நிறுவனத்தின் புனித் ரென்ஜென் 6வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் 11வது இடத்தில் 'சேனல்' நிறுவனத்தின் தலைலரான லீனா நாயர் இடம்பெற்றுள்ளார். இவர் தான் இப்பட்டியலில் முன்னணி இடத்தைப் பெற்ற பெண் தலைவர் ஆவார். மேலும் 100 சி.இ.ஓ.,க்கள் அடங்கிய இப்பட்டியலில், வெறும் 7 பெண்கள் மட்டுமே உள்ளனர்.
நாடுகள் அடிப்படையில் பார்க்கும்போது, இந்தப் பட்டியலில், அதிக எண்ணிக்கையில் தலைமை செயல் அதிகாரிகளை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்திய அதிகாரிகள் சிறந்து செயல்பட்டாலும், எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 6வது இடத்தில் தான் உள்ளது.
இப்பட்டியலில் 'மகிந்திரா' குழுமத்தின் ஆனந்த் மகிந்திரா, 'ஏர்டெல்' நிறுவனத்தின் சுனில் மிட்டல், எஸ்.பி.ஐ., வங்கியின் தினேஷ் குமார் காரா, 'இன்போசிஸ்' நிறுவனத்தின் சலில் பாரிக் ஆகிய இந்திய தலைவர்களும் இடம்பெற்று உள்ளனர்.
உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய அம்பானி