புதுடில்லி:இந்திய ரயில்வேயின் வருவாய், நடப்பு நிதியாண்டில், இதுவரை 1.91 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்றும்; முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட, இது, 41 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எதிர்பார்ப்பு
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் இதுவரை, ரயில்வேயின் வருவாய் 1.91 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் இறுதியில், மொத்த வருவாய் 2.35 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பீட்டு காலத்தில் இதுவரை 11 ஆயிரத்து, 850 லட்சம் டன் சரக்குகளை ரயில்வே ஏற்றிஉள்ளது.
'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை 2025ம் ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுஉள்ளது.
ஹைட்ரஜனால் இயக்கப்படும் ரயில்களை தயாரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்த உள்ளது.
சலுகை
நடப்பு நிதியாண்டில், பயணியருக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை, குறிப்பாக, முதியோர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உள்ளிட்டவற்றை நிறுத்தியது, மற்றும் ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கியது ஆகியவற்றின் காரணமாகவும் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.