தமிழக காங்., தலைவர் அழகிரி: ஈரோடு கிழக்கு தொகுதி, காங்., வென்ற தொகுதி. இடைத்தேர்தலிலும் காங்., தான் போட்டியிடும். வேட்பாளர் யார் என்பது ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். கூட்டணி கட்சிகளான, தி.மு.க., - ம.தி.மு.க., - வி.சி., மற்றும் பொதுவுடைமை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
டவுட் தனபாலு: சத்தியமூர்த்தி பவன்ல சட்டை கிழியாம, வேட்பாளர் பெயரை டில்லி மேலிடத்துக்கு அனுப்பிட்டு, தேவுடு காத்துட்டு இருக்காம, ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிப்பது எல்லாம் காங்கிரஸ் கலாசாரத்துலயே இல்லாத காரியம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக வருவாய் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: கோவை, வளர்ச்சி பெற்ற மாவட்டம். இங்கு இன்னும் நிறைய தொழிற்சாலைகள் தேவை. விவசாயிகளுக்கு சிரமம் தராமல் நிலங்களை கையகப்படுத்துகிறோம்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில விவசாய நிலங்களை கையகப்படுத்தினா, 'விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு'ன்னு கொடி பிடிப்பீங்க... அதையே நீங்க ஆட்சிக்கு வந்து செய்யுறப்ப, 'சிரமம் தராம செய்றோம்'னு பூசி மெழுகுவது சரியா என்பது தான் எங்க, 'டவுட்!'
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்தில், 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விருப்பப்பட்டால், பயனாளிகள் குறித்த பட்டியலை வழங்க தயாராக உள்ளோம்.
டவுட் தனபாலு: வாக்காளர் பட்டியலில், ஒரே நபருக்கு நான்கு தொகுதிகளில் பெயர் இருக்கும்... அதை கண்டுபிடித்து நீக்குவதே சவாலானது... அப்படி இருக்கும் போது, நீங்க கொடுக்கும், ஒரு கோடி பேரின் பெயர் பட்டியலும் உண்மையா இருக்குமா என்பது தான், 'டவுட்!'
Advertisement