பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மத்திய அரசு அறிவித்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள், 2022-ஐ அமல்படுத்தினால், உற்பத்தி செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும், மின் கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலை ஏற்படும்; இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் செலவு அதிகரித்தாலோ, கொள்முதல் விலை உயர்ந்தாலோ, அந்த கூடுதல் செலவை அதே மாதத்தில் நுகர்வோரிடமிருந்து வசூலிக்க புதிய விதிகள் வகை செய்கின்றன. தனியார் மின் நிறுவனங்களுக்கு சாதகமான இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
'பெட்ரோல், டீசல் மாதிரி மின்சாரத்துக்கும், தினமும் விலையை நிர்ணயிக்க போறாங்க'ன்னு சொல்லி, வயிற்றில் புளியை கரைக்கிறாரே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மீள முடியாத கடன் சுமையில், இலங்கை அரசு சிக்கியுள்ள நிலையில், பன்னாட்டு நிதியத்திடம் இருந்து அந்நாடு, 23 ஆயிரத்து, 606 கோடி ரூபாய் கடன் பெற இந்தியா ஆதரவு தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களும், கொடுமைகளும் தொடர்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, கடன் வழங்குவதற்கு ஆதரவளிப்பதோ கூடவே கூடாது.
நம் பெருந்தன்மையை அவர்கள் புரிந்து கொண்டு, இலங்கை தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் வஞ்சிக்காமல் இருந்தால் நல்லது!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: திருமாவளவன், 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஓட்டு சேகரிப்பது வேடிக்கையாக உள்ளது. எத்தனையோ மக்கள் பணிகள் இருக்க, தேவையற்ற கலாசார சீர்கேட்டுக்கு வித்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும், தன் கட்சிக்கார தம்பி வெற்றி பெற ஓட்டு சேகரிப்பது, அரசியலின் அவலம். 'சூதாட்டமாக இருந்தாலும், என் கட்சிக்காரன் வெற்றி பெற வேண்டும்' என, எண்ணுவதற்கு சமம். மண், மக்கள் என்றெல்லாம் பேசி, மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
திருமாவளவன் மேடையில் பேசுவதை, சீரியசாக எடுத்து கொள்ளக் கூடாது என்பது, இப்போது தான் இவருக்கு புரிகிறதா?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கட்சிக்கு வரும் நிதியில், கட்சியின் குடும்பங்கள் அபகரித்தது போக மீதி மட்டுமே கணக்கு காட்டப்படும். அதுவும் கட்சிக்குள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்ற நிலை இருந்தது. நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, கட்சிகளுக்கான நிதியளிப்பை வெளிப்படைத் தன்மையோடு கொண்டு வந்த ஒரே கட்சி, ஒரே அரசு, பா.ஜ., மட்டுமே.
எல்லா கட்சிகளும் இதே மாதிரி வெளிப்படைத் தன்மையோடு தங்கள் கட்சிக்கான நன்கொடை விபரங்களை வெளியிட்டால், மக்களுக்கு அதிர்ச்சியில், 'ஹார்ட் அட்டாக்' வந்துடும்!