சென்னை:வீடுகளில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் சேவையை துவக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்து, மூன்று மாதங்களாகியும், மின் வாரியம் செயல்படுத்தாமல் உள்ளது.
நிதி நெருக்கடி
தமிழகத்தில் உள்ள, 2.34 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இது தவிர, 9.75 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டிற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு 450 ரூபாய் செலவாகிறது.
அதன்படி, இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக, நடப்பு நிதியாண்டில் வீடுகளுக்கு 5,284 கோடி ரூபாயும், குடிசை வீடுகளுக்கு 288 கோடி ரூபாயும் செலவாகி உள்ளது. இந்த தொகையை, தமிழக அரசு வழங்கும்.
முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வசதி படைத்த தொழிலதிபர்களின் வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
தற்போது, மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதனால், 2022 செப்., 10 முதல் மின் கட்டணத்தை, மின்சார ஒழுங்குறை ஆணையம் உயர்த்தியது.
ஒப்புதல்
மேலும், இலவச மற்றும் மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்கும் சேவையை துவக்க மின் வாரியத்திற்கு ஆணையம் ஒப்புதல் அளித்தது. மூன்று மாதங்களாகியும் அந்த சேவையை துவக்காமல், மின் வாரியம் தாமதம் செய்கிறது.
இலவச திட்டங்களை இளைஞர்கள் விரும்புவதில்லை. எனவே, இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்கும் வசதியை விரைந்து செயல்படுத்துமாறு, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
அரசின் நிதி நெருக்கடிக்கு உதவ, தாமாக முன்வந்து இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்கும் மின் நுகர்வோரை கவுரவிக்கும் வகையில் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை, மின் வாரிய இணையதளத்தில் வெளியிடலாம்.அதை பார்க்கும் ஒவ்வொரு நபரும், இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுக்க ஆர்வமுடன் முன்வருவர்.