வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:'ஜாதி பாகுபாடின்றி, குடியரசு தின விழா மற்றும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 'ஜாதி பாகுபாடின்றி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி தலைவர்களை வைத்து, தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்த வேண்டும்.
'கிராம சபைக் கூட்டங்களில், எவ்வித ஜாதி பாகுபாடின்றி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்' என தெரிவித்திருந்தேன்.
அப்போது, பட்டியலினத் தலைவர்கள் கொடியேற்றுவதில் பிரச்னைகளுக்குரிய, 15 இனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை களையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி அறிக்கை பெறப்பட்டு, அரசால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், எவ்வித புகார்களும் இல்லாமல், வரும் 26ம் தேதி, அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினவிழா இணக்கமாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குடியரசு தினத்தன்று நடக்கும் கிராம சபைக் கூட்டத்திலும், எவ்வித ஜாதி பாகுபாடின்றி, கிராம ஊராட்சி தலைவர்களை கண்ணியத்துடன் நடத்தும் விதமாக, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் கூட்டம் நடந்துள்ளதை உறுதி செய்து, விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.