சென்னை:''உலக வங்கி உதவியுடன் செயல்படும் சுகாதார சீரமைப்பு திட்டத்தின்படி, 2030க்குள் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சாலை விபத்து
தமிழக சுகாதார சீரமைப்பு திட்டத்தின், மாவட்ட அளவிலான சுகாதார உயர் அலுவலர்களுக்கான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன், கருத்தரங்கை துவக்கி வைத்து, கையேட்டை வெளியிட்டார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கான, அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு அடைய, தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம் துவங்கப்பட்டது.
ஐ.நா., அமைப்பின் பூர்த்தி செய்யப்படாத இலக்குகளான தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்துதல், மனநல சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை, 2030க்குள் அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அந்நோய்களை கண்டறிந்து தடுக்க, மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் 2021ம் ஆண்டில், 55 ஆயிரத்து 713 சாலை விபத்துகள் எற்பட்டு, 14 ஆயிரத்து 912 பேர் இறந்துள்ளனர்.
இவற்றை தடுக்கும் வகையில், 'இன்னுயிர் காப்போம்' திட்டம் துவங்கப்பட்டு, சாலை விபத்தில் சிக்கிய 1.36 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 25 மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை துறை செயல்படுகிறது.
காலதாமதம்
சென்னை ஐ.ஐ.டி., யுடன் இணைந்து, ஆராய்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
அதில், 108 ஆம்புலன்ஸ் சேவைகள், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களை கண்டறிவதில் உள்ள காலதாமதம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு, கருத்தரங்கில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
சுகாதார சேவைகளை மேம்படுத்த, ஆய்வு முடிவுகள் உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.