''கள்ளச்சந்தையில மது விற்பனையை தடுக்க, போலீசார் புது, 'ரூட்' கண்டுபிடிச்சு, 'பார்' உரிமையாளர்களுக்கு விசுவாசத்தை காட்டியிருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.
''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சமீபத்துல, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளை மூடுனாங்கல்லா... அன்னைக்கு சென்னையில பெரும்பாலான பார்கள்ல, 'பிளாக்'ல சரக்கு விற்பனை, சக்கை போடு போட்டுச்சு வே...
''இதை கண்டுக்காம இருக்க போலீஸ்காரங்களுக்கு, 'சிறப்பு கவனிப்பு' நடந்துச்சு... ஆனாலும், கணக்கு காட்டணுமுல்லா... அதுக்காக, சில நுாறு பாட்டில்களை பிடிச்சதா, அங்கங்க சில வழக்குகளை பதிவு பண்ணியிருக்காவ வே...
''இதுல கூத்து என்னன்னா, சென்னை பள்ளிக்கரணை பகுதி யில, முந்தின நாள் ராத்திரியே, 'டாஸ்மாக்' கடை வாசல்ல போலீசார் நின்னுட்டாவ... மறுநாள் கடை லீவுங்கிறதால, அஞ்சாறு குவார்ட்டர் பாட்டில்களை, வாங்கிட்டு போன, 'குடி'மகன்களிடம் இருந்து, பாட்டில்களை பிடுங்கிட்டாவ வே...
''அதுவும், தமிழ் தெரியாத, அப்பாவி வடமாநிலத் தொழிலாளர்களை குறிவச்சு பாட்டில்களை பறிமுதல் பண்ணிட்டாவ... அவங்க, 'நாங்க குடிக்க தானே வாங்குனோம்... விற்கிறதுக்காக பெட்டி பெட்டியா ஆட்டோக்கள்ல ஏத்திட்டு போனவங்களை விட்டுட்டு, எங்களிடம் பிடுங்குறது நியாயமா'ன்னு புலம்பிட்டே போனாவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''ஒரே உத்தரவுல, பதவி உயர்வுக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க...'' என, அடுத்தத் தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்தத் துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில, நேரடியா நியமிக்கப்பட்டு வந்த ஏ.பி.ஆர்.ஓ., எனப்படும், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி பணியிடங்கள், இனி டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலமாவே நிரப்பப்படும்னு சமீபத்துல அரசு அறிவிச்சிடுச்சுங்க...
''இதனால, இந்தத் துறையில திரைப்பட கருவி இயக்குபவர்களுக்கு, 2017 வரை வழங்கப்பட்டு வந்த, ஏ.பி.ஆர்.ஓ., பதவி உயர்வு இனிமே கிடைக்காதுங்க... 'புரமோஷன்' கிடைக்கும்னு ஆறு வருஷமா காத்திருந்தவங்க, அரசு உத்தரவால, அதிர்ச்சியில இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆவின் பிடிவாதத் தால, ஐஸ்கிரீம் வீணா போறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ஆவின் நிறுவனம் பால் மட்டும் இல்லாம, 'ஐஸ்கிரீம், குல்பி, லஸ்சி' குளிர்பானம், மோர், பனீர், தயிர், வெண்ணெய்னு, 200க்கும் அதிகமான பால் பொருட்களை தயாரிச்சு, 'சப்ளை' செஞ்சுண்டு இருக்கோல்லியோ...
''ஆவின் பாலகங்கள் தவிர, தனியார் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள்லயும் இந்தப் பொருட்கள் கிடைக்கறது... 'ஆன்லைன்' விற்பனை கூட இருக்கு ஓய்...
''குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன வாகனங்கள் மூலமா, இந்த பொருட்களை சப்ளை செய்ய, பல கோடி ரூபாய்க்கு தனியாருடன், ஆவின் ஒப்பந்தம் போட்டிருக்கு... குறைஞ்ச பட்சம், 10 ஆயிரம் ரூபாய்க்கு, 'ஆர்டர்' போட்டா தான், பாலகங்களுக்கு ஐஸ்கிரீம் சப்ளை செய்யறா ஓய்...
''சூப்பர் மார்க்கெட் நடத்தறவாளுக்கு பிரச்னை இல்ல... பாலகம் நடத்தறவா மொத்தமா, 10 ஆயிரத்துக்கு, ஆர்டர் போட முடியாம தவிக்கறா... பல மாவட்டங்கள்ல தயாரிக்கப்பட்டு, ஆவின் விற்ப்பனை பிரிவுக்கு எடுத்து வரப்பட்ட ஐஸ்கிரீம், குல்பி எல்லாம், 'டன்' கணக்குல தேங்கி, உருகி வீணா போறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.
Advertisement