திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் கிராமத்தில், மாவட்ட நூலக ஆணையக் குழு வாயிலாக, 2000ம் ஆண்டு ஊர்ப்புற நூலகக் கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த நுாலகத்தில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதுதவிர, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களும் உள்ளதால், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் நுாலகத்திற்கு தினமும் வந்து படிக்கின்றனர்.
காலை முதல், மாலை வரை நுாலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. மேலும், தினமும், 50க்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தகங்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டுசென்று படித்துவிட்டு திருப்பி கொடுக்கின்றனர்.
இந்நிலையில், நுாலகத்தை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடம் பழுதடைந்து உள்ளது.
குறிப்பாக, கட்டட மேற்கூரையின் சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
ஜன்னல் கம்பிகள் மற்றும் பக்கவாட்டு சுவர்களும் விரிசல் அடைந்துள்ளன. மழை பெய்தால், நூலகத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாசகர்கள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அச்சத்துடன் நுாலகத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், நுாலக கட்டடத்தை பார்வையிட்டு, பழுதடைந்த கட்டடத்தை இடித்து, புதிய நுாலகக் கட்டடம் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.