திருவள்ளூர்:தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக, சேவல் சண்டை போற்றப்படுகிறது. சூதாட்டப் புகார்களால் இப்போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும் திருவள்ளூர் அடுத்த தங்கானுாரில் கடந்த 25 ஆண்டுகளாக சேவல் போட்டி நடைபெற்று வருவதால், இந்த ஆண்டும் கிராம மக்களின் பொழுதுபோக்கு மட்டுமின்றி மனதுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் சேவல் சண்டை போட்டிக்கு, நீதிமன்ற அனுமதி பெற்றனர்.
தொடர்ந்து தங்கானுாரில் சேவல் சண்டை போட்டி நேற்று துவங்கியது. நாளை வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க சேவல் வளர்ப்போர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் சேவல் போட்டி நடைபெறும் களத்தில் குவிந்தனர்.
எடையை பொறுத்து சேவல் மோதலுக்கு அனுமதிக்கப்பட்டது. குருவிப்பூ சேவல், மத்தாப்பூ சேவல், தவக்களைப்பூ சேவல், கத்திப்பூ சேவல், ஊசிப்பூ சேவல் ஆகிய வகைகளும் இதேபோல வெள்ளைக்கால், பேய்கருப்பு, பசுப்புக்கால், பூதக்கால், முகைக்கால், கருங்கால் ஆகிய சேவல் வகைகள் பிரித்து போட்டிக்கு விடப்படுகின்றது.
போட்டியில் பங்கேற்கும் சேவல்களுக்கு ஒருமணி நேரத்தில் முதல் 20 நிமிடம் களத்தில் மோத விடுகின்றனர். அடுத்து 20 நிமிடங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறக்குகின்றனர்.
சேவல் சண்டை போட்டிகள் பார்த்து ரசிக்க ஏராளமானோர் தங்கானூர் கிராமத்தில் குவிந்து வருவதால் சேவல் போட்டி களைகட்டி வருகிறது.
முதல் பரிசு பெறும் சேவல் உரிமையாளருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'பைக்', இரண்டாம் இடத்தை பிடிக்கும் சேவல் உரிமையாளருக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக் பரிசாக வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.