கூடலுார்:கூடலுாரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தை மாணவிகள் சுத்தம் செய்த 'வீடியோ' குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவிகள் சிலர் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த, வீடியோ வெளியாகி பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது. 'இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என, வலியுறுத்துள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி கூறுகையில்,''பள்ளியை சுத்தம் செய்ய, நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர் நேற்று (நேற்று முன்தினம்) வராததால், காலையில் நான் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். இதனை பார்த்த, சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள மாணவிகள் சிலர், மைதானத்தில் சிதறி கிடந்த இலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், நான் சுத்தம் செய்ததை தவிர்த்து, மாணவிகள் மைதானத்தை சுத்தம் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதனை பற்றி மாணவிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.
கூடலுார் வட்டார கல்வி அலுவலர் சுப்ரமணியம் கூறுகையில்,''இது தொடர்பாக விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.