திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில், கடந்த ஜன., 18ல், மனித எலும்புக்கூடுகள் தனித்தனியே சிதறி கிடந்தன.
கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அளித்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் எழும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில், திருக்கழுக்குன்றம், மாதுளங்குப்பம் பகுதி, வேதகிரி மகன் சந்திரன், 45, கொலையானது தெரிந்தது. திருமணமான இவரை, மனைவி கைவிட்டு, வேறொரு நபருடன் சென்றுள்ளார்.
தொடர்ந்து, வேறு நபரின் மனைவி சித்ராவுடன், 40, வாழ்ந்து வந்துள்ளார். ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெள்ளப்பந்தலில் தங்கி, விவசாய கூலித் தொழில் செய்துவந்த நிலையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலையாகியுள்ளார்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
சந்திரன் வீட்டிற்கு அவ்வப்போது வந்த, சாலவாக்கம், மெய்யூர் பகுதி, சாமந்தி மகன் சக்திவேலுக்கு, 27, சித்ராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச., 16ல், வெளியே சென்று திரும்பிய சந்திரன், அவர்களின் உல்லாசத்தை கண்டு ஆத்திரமடைந்து, அவர்களை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, மனைவி, கள்ளக்காதலன் ஆகியோர் இணைந்து, சந்திரன் தலையில் அடித்துக் கொன்று, உடலை ஏரியில் புதைத்துவிட்டு தப்பினர். தற்போது, இருவரையும் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.