பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்களில், விவசாயிகளுக்கு பல்துறை அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினர்.
பொள்ளாச்சி வடக்கு வட்டார, வேளாண் விரிவாக்க மையத்துக்கு உட்பட்ட, தேவம்பாடி, குள்ளக்காபாளையம் கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தில், வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது, அதற்காக மானிய விலையில் 'கிட்' வழங்கும் முறை, தென்னந்தோப்பில் வரப்புகள் ஓரத்தில் பழநாற்றுகள் நடுவது, காய்கறி பயிர் சாகுபடி குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், தோட்டக்கலை பயிர்கள் பரப்புகள் விரிவாக்க திட்டத்தில், மா, பலா, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, சப்போட்டா, கொடுக்காபுளி, நாவல், சீதா, மாதுளை, அத்தி, மங்குஸ்தான், முருங்கை, ஜாதிக்காய், புளி, முந்திரி, மிளகு, ரோஜா பூ, மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், மானியம் குறித்தும், அதிகாரிகள் விளக்கினர்.
இதில், கோமங்கலம்புதுார் கிராமத்தில், தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த, 'கோகோகான்' பயன்படுத்துவது குறித்தும், மிளகாய் மற்றும் தக்காளியில் மேற்கொள்ள வேண்டிய, நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.