ரோடு சேதம்
பொள்ளாச்சி, சீனிவாசபுரத்தில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் ரோடு, ஆங்காங்கே சேதமைடைந்து உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ரோட்டில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.
-- விக்ரம், சீனிவாசபுரம்.
குப்பையால் சீர்கேடு
பாலாற்றங்கரை ஆஞ்சேநேயர் கோவிலில் இருந்து, கரியாஞ்செட்டிபாளையம் செல்லும் ரோட்டோரம், குப்பை கொட்டப்பட்டுள்ளது. அவ்வப்போது, குப்பைக்கு தீயிட்டும் எரிக்கப்படுகிறது. ரோட்டோரம் குப்பை கொட்டுவதை, தீ வைப்பதையும் ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.
- -அம்சவேணி, கரியாஞ்செட்டிபாளையம்.
வாகனங்களில் அத்துமீறல்
பொள்ளாச்சி நகர ரோடுகளில், பயணிக்கும் வாகன ஓட்டிகள் பலர், ெஹல்மெட் அணிவதில்லை. விதிகளை மீறி, 'டிரிப்ள்ஸ்' செல்கின்றனர். போக்குவரத்து போலீசார், இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -வான்மதி, பொள்ளாச்சி.
ஆள் இறங்கும் குழி சேதம்
பொள்ளாச்சி, ராஜாமில் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டத்தின், ஆள் இறங்கும் குழி மூடிகள் உடைந்துள்ளன. அங்கு ரோடும் உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால், விபத்து அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.
- நாகஜோதி, பொள்ளாச்சி.
கனரக வாகனங்களால் அபாயம்
தமிழம் - -கேரளாவை இணைக்கும், முக்கிய ரோடுகளாக இருப்பதால், பொள்ளாச்சி நகர ரோடுகளில், கனரக வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனரக வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக பாரம் ஏற்றிச் செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை, தடுக்க வேண்டும்.
- அர்ஜூன், பொள்ளாச்சி.
புதர்மண்டிய ரோடு
வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் செல்லும் ரோட்டில், இருபக்கமும் புதர்மண்டி கிடக்கிறது. எதிரே வரும் வாகனங்கள், வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. ரோட்டோர புதர் அகற்ற, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--வருண், ஈட்டியார் எஸ்டேட்.
பாலத்தில் 'லைட்' இல்லை
அம்பராம்பாளையம் சுங்கத்தில் இருந்து, ஆத்துப்பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில், மின் விளக்கு வசதியில்லை. இதனால், இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மின்விளக்கு அமைக்க வேண்டும்.
- மகேஸ்வரன், ஆத்துப்பொள்ளாச்சி.
வாகனங்கள் அதிவேகம்
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காமராஜர் ரோடு, நேரு ரோடு, ரவுண்டானா பகுதிகளில், பைக் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-மகேஸ்வரி, மகாலிங்கபுரம்.