பேரரசி
ஆசிரியர்: மோகன் ரூபன்
பக்கம்: 464, விலை: ரூ.500
வெளியீடு: அபிநயா பிரசுரம்
பிரிட்டனின் குட்டி இளவரசியாக எலிசபெத் பொறுப்பேற்றதில் இருந்து துவங்கிறது. இரண்டாம் உலகப்போரில் அவரின் செயல்பாடுகள், கிடைக்கும் வாய்ப்புகளில் பளிச்சிடும் தனித்தன்மை, வீட்டுக்குள் நடக்கும் காதல் கதைகள், டயானா மரணத்தின் போது இவரின் பதிவு, பிரதமர்களுடனான அணுகுமுறை என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நுால், தனி மனுஷியின் கதை மட்டுமல்ல; நுாறாண்டு உலக வரைபடத்தின் கதை.
நீராம்பல் பூத்த இரவு
ஆசிரியர்: மயிலாடுதுறை இளையபாரதி
பக்கம்: 120, விலை: ரூ. 140
வெளியீடு: கவி ஓவியா
'வசப்படாதிருக்கும் வாழ்வின் நீள அகலங்களை நினைத்தபடி ஏழடுக்குக் கட்டடத்தின் வெளிப்புற கயிற்றேணியில், இட வலமாய் ஆடியபடி வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறான் அவன்' எனும் கவிதை, ஊசலாட்டம் என்ற தலைப்பில் விசனப்படுகிறது. இப்படி, பலவித உணர்ச்சிகளின் குவியலாய் 'நீராம்பல் பூத்த இரவு' கவிதையாய் உரையாடுகிறது
திருப்பாவை- எளிய விளக்கம்
ஆசிரியர்: பி.ஏ.கிருஷ்ணன்
பக்கம்: 128, விலை: ரூ. 160
வெளியீடு: காலச்சுவடு
மாதங்களில் மார்கழிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பக்தியும், இசையும், பஜனையும் இழையோடும் குளிர் மாதம். அத்துடன், ஆண்டாள் அருளிய திருப்பாவையும் நினைவுக்கு வரும். படிப்போரையும் கேட்போரையும் கண்ணனின் பக்தியில் கரைய வைக்கும் 30 பாடல்களின் தொகுப்பான திருப்பாவைக்கு, தற்கால நடையில் உரை எழுதி உள்ளார் கிருஷ்ணன்.
வரலாறு முக்கியம்
ஆசிரியர்: முருகு தமிழ் அறிவன்
பக்கம்: 298, விலை: ரூ.360
வெளியீடு: மெட்ராஸ் பேப்பர்
இந்திய வரலாறு துவங்கி, சைவ ஆதீனங்களின் வரலாறு வரை நுால் பேசுகிறது. வங்கிகளின் வரலாறும் உள்ளது. வளம் குன்றாத சிங்கப்பூரின் வரலாறும் உள்ளது. நீர் மேலாண்மை, நாணயவியல், இதழியல், மாற்று மருத்துவம், உணவு, உடை, இசை, இயல் என திரும்பிய திசையில் எல்லாம், வரலாறு இருப்பதை சுவாரசியமாய் அலசுகிறது.
கவிதையும் ரசனையும் --- 1
ஆசிரியர்: அழகிய சிங்கர்
பக்கம்: 152, விலை: ரூ. 150
வெளியீடு: விருட்சம்
இந்த நுாலில், 21 கவிஞர்களின் ஒவ்வொரு கவிதையை எடுத்துக்கொண்டு, அது உணர்த்தும் பொருளை, அதில் உள்ள அழகியலை, அது சொல்லாமல் சொல்லும் கருத்தை விளக்குகிறார் அழகிய சிங்கர். இவை, ஏற்கனவே இணையவெளியில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் என்றாலும், அவற்றை வாசிக்காதவர்களுக்கு, கவிதையை புரிந்து கொள்ளும் கலையைச் சொல்லும்.
கொம்பேரி மூக்கன்
ஆசிரியர்: மவுனன் யாத்ரிகா
பக்கம்: 268, விலை: ரூ. 320
வெளியீடு: எழுத்து
மூர்க்கமான மூக்கன், அவன் தம்பி சாதுவான அழகர், இவர்களின் ஊடாக விரியும் குடும்ப நாவல். ஊரோடும் ஊர் மக்களோடும் காற்று போல் வியாபிக்கிறது கதை. அதில் வரும் ராமன், அஞ்சலம் என்ற வயோதிக பாத்திரங்கள் என அனைத்தும், நகமும் சதையுமாய் உணர்வுப்பூர்வமாக நகர்ந்து, இறுதியில் ஒரு கொலையுடன் முடிகிறது.
அநீதி கதைகள் 2
ஆசிரியர்: அருண்.மோ
பக்கம்: 128 விலை: ரூ.160
வெளியீடு: கருப்பு
பத்து சிறுகதைகள் உடைய இந்த தொகுப்பில், அனைத்து கதைகளிலுமே யாரோ ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவருக்கு ஏற்படும் அடுத்தடுத்த பாதிப்பு, நமக்குள் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. நிதர்சன உலகில் என்ன நடக்கிறதோ அதையே, இவரது கதைகள் படம்பிடிக்கின்றன. இதுவே நுாலாசிரியன் கதைகளுக்கு சுவராசியமும் கூட்டுகின்றர். படிப்பாளர்களுக்கு, இடம் மற்றும் காலத்தை உணர்வுபூர்வமாக கொண்டுவந்து சேர்க்கிறது.