சென்னை புத்தகக் காட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அரங்கில் அரியத் தமிழ் நுால்கள் 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.
குறிப்பாக, சமீபத்தில் வெளியான கால்டுவெல் எழுதிய 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' மற்றும் கா.ராஜன் எழுதிய 'தொன்மைத் தமிழ் எழுத்தியல்' உள்ளிட்ட நுால்கள் 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கின்றன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மலர் 20 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
அதேபோல், உரைவேந்தர் தமிழ்த்தொகை, மயிலை சீனி.வேங்கடசாமியின் நுால்கள், கருணாமிர்த சாகரம், ரா.இளங்குமரனார் தமிழ்வளம், திரு.வி.க.கவியரசன், முடியரசன், புலவர் குழந்தை உள்ளிட்டோரின் நுால்கள் முழுமையும் கிடைக்கின்றன.
மேலும், சங்க இலக்கியம், முதுமொழிக் களஞ்சியம், செம்மொழிச் செம்மல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு, யாழ்ப்பாண அகராதி, வெள்ளிவிழா பேரகராதி, தொல்காப்பியம் உள்ளிட்ட நுால்கள் சிறப்புத் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.
குறிப்பாக நாட்டு உடைமையாக்கப்பட்ட நுால்களும், தஞ்சைத் தமிழ் பல்கலை வெளியீடுகளும், அண்ணா பல்கலை மாணவர்களுக்கான பாடப்புத்தக மொழிபெயர்ப்புகளும் கிடைப்பது சிறப்பு.
இந்த புத்தகக் காட்சியில், தமிழ் ஆய்வு மாணவர்கள் அவசியம் செல்ல வேண்டிய அரசு பதிப்பகத்தில், இது முக்கியமானது.
- நமது நிருபர் -