சென்னை, 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்' சார்பில் நடத்தப்படும், செட்டிநாடு பாரம்பரிய கண்காட்சிக்காக, சென்னையில் இருந்து பழமையான கார்கள், இருசக்கர வாகனங்கள் நேற்று, ஊர்வலமாக புறப்பட்டன.
கடந்த, 20 ஆண்டுகளாக லாப நோக்கின்றி செயல்படும் பாரம்பரிய கார், இருசக்கர வாகனங்களுக்கான முன்னணி நிறுவனம், 'மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்!'
இதன் சார்பில், சென்னை - செட்டிநாடு பாரம்பரிய கண்காட்சி ஒன்றை, கானாடுகாத்தான் செட்டிநாடில் இன்று நடத்தப்படுகிறது.
இதை முன்னிட்டு, நேற்று காலை ஆலந்துாரில் இருந்து பழமையான, பாரம்பரியம் உடைய 17 கார்கள், ஐந்து இருசக்கர வாகனங்கள் புறப்பட்டன. கிளப் உறுப்பினர் கவிதா பங்காரு கொடியசைத்து, வாகன அணிவகுப்பை துவக்கி வைத்தார்.
கிளப் தலைவர் பால்ராஜ் கூறியதாவது:
எங்கள் கிளப், 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழமையான, பாரம்பரியமான கார்கள் வைத்திருப்போர் ஒருங்கிணைந்து, அவர்களின் வாகனங்களின் பராமரிப்பிற்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பழமையான, பாரம்பரிய கார்கள் அணிவகுத்து செல்வது வழக்கம். இந்தாண்டு, சென்னை - செட்டிநாடு பாரம்பரிய கண்காட்சி எனும் பெயரில் நடத்தப்படுகிறது.
இன்று புறப்படும் அனைத்து கார்கள், இருசக்கர வாகனங்கள், மாலையில் கானாடுகாத்தான் செட்டிநாடு சென்றடையும். அங்கு, நாளை - இன்று - காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
ஜன., 22ம் தேதி காலை, அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்தடையும். இந்த கண்காட்சியில், பெங்களூருவை சேர்ந்த இரண்டு பாரம்பரிய கார்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.