சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'பியூச்சர் டேலன்ட்ஸ் டி - 20' கிரிக்கெட் போட்டி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இதில், 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., மற்றும் ஸ்ரீ தியாகராய கல்லுாரி அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஸ்ரீ தியாகராய அணி, 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 99 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் வல்லரசு, 34 பந்துகளில், 7 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 68 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., அணி, 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி, 101 ரன்கள் அடித்து அசத்தினர். இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.ஆர்.எம்., வெற்றி பெற்றது.
அணியின் வீரர் விக்னேஷ் 18 பந்துகளில், 6 சிக்சர், 3 பவுண்டரி என, 53 ரன்களும், ஷியாம் 19 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினர்.
நேற்று நடந்த ஆட்டத்தில், ஸ்ரீ ராமச்சந்திரா இன்ஸ்டிடியூட் மற்றும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐ.ஐ.டி., அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த, ஸ்ரீ ராமச்சந்திரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு, 168 ரன்களை அடித்தது. அணியின் வீரர், சவுரவ் 50 பந்துகளில், 3 சிக்சர், 6 பவுண்டரி என, 68 ரன்களும், துரை 30 பந்துகளில், 42 ரன்களும் அடித்தார்.
அடுத்து பேட் செய்த, ஐ.ஐ.டி., மெட்ராஸ், 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து, 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.