உடுமலை:நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காதது மற்றும் நீதிமன்ற உயர்வை அமல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து, கடையடைப்பு போராட்டம் நடத்த, பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெதப்பம்பட்டி வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தலைவர் துரைசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பெதப்பம்பட்டி நால்ரோடு சந்திப்பில், உயர் மின் கோபுர விளக்கை போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்துள்ளனர். அதை சந்திப்பின் மையப்பகுதிக்கு மாற்றியமைத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
பஸ் ஸ்டாப் அருகில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக கழிப்பிடம் கட்ட வேண்டும். நால்ரோடு பகுதியில் இடையூறை தவிர்க்க, சரக்கு வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்க வேண்டும்.
தாராபுரம் ரோட்டுக்கு வடபுறம் உள்ள கடைகளுக்கு, பின்புறம் கழிவு நீர் செல்ல, 5 அடி அகலத்தில், கழிவு நீர் சாக்கடையும், 10 அடி அகலத்தில், பாதையும் உள்ளது. சாக்கடை மற்றும் பாதையை அடைத்து வைத்துள்ளனர். இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கழிவு நீரை வெளியேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்தாமல், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலையும் கண்டுகொள்ளாமல், அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
எனவே அரசுத்துறை அதிகாரிகளை கண்டித்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும், வரும் 27ம், தேதி, கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.