சென்னை, 'அப்பல்லோ' மருத்துவ மனை மற்றும் தமிழ்நாடு இரைப்பை குடலியல் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் சிகிச்சை குறித்து, விழிப்புணர்வு மாநாட்டை, சென்னை தி.நகரில் நாளை நடத்துகின்றன.
இதில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோயின் தன்மை மற்றும் பாதிப்பு குறித்த மதிப்பீடு, சிகிச்சை மற்றும் மேலாண்மையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் ஆகியவை குறித்து, மாநாட்டில் எடுத்துரைக்கப்படும்.
இது குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இரைப்பை குடல் நோய் மருத்துவர் டாக்டர் பழனிசாமி கூறுகையில், ''வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிற காரணிகளால், இரைப்பை குடல் அழற்சி அதிகம் ஏற்படுகிறது.
''நம் மக்கள் தொகையில் குடல் அழற்சி நோய் உள்ளவர்களைக் கண்டறிவதற்கான சிறந்த தகவல்கள் மற்றும் திறன்களைப் பெற, இந்த மாநாடு நம் மருத்துவர்களுக்கு உதவும்,'' என்றார்.
இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக, வானகரத்தில் உள்ள அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மூத்த மருத்துவர்கள் மற்றும் ஆறு பயிற்சி மருத்துவர்களுக்கு, கொலோனோஸ்கோபி திறன்கள் குறித்து, ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.