மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், பாரம்பரிய சின்னமான கடற்கரை கோவில் உள்ளது. அதன் அருகிலேயே சுற்றுலா பயணியர் கடலில் ஆர்வத்துடன் குளிக்கின்றனர்.
நீச்சல் அறியாதவர்கள், அலையில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். கடற்கரை செல்லும் குறுகிய மணற்பாதையில், ஆம்புலன்ஸ் செல்ல இயலாது.
கடற்கரை கோவிலிலிருந்து, 300 மீ., தொலைவில் உள்ள நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்படும். கடல் ஆபத்தில் சிக்கியோரை, அங்கு கொண்டுவந்து, பிறகு மருத்துவமனை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஆபத்தான, தவிர்க்க முடியாத நேரங்களில், கடற்கரை கோவில் பகுதி வரை, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டால், விபத்தில் பாதிக்கப்படும் பயணியை எளிதாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலும்.
தொல்லியல் துறையோ, நுழைவாயில் பிரதான கதவை நிரந்தரமாக மூடி வைத்துள்ளது. பிரமுகர்கள் வரும்போது, நுழைவாயிலை திறந்து, கோவில் பகுதி வரை வாகனம் அனுமதிக்கப்படுகிறது. பிற வாகனங்களை அனுமதிப்பதில்லை.
அவசரமான சூழலில், போலீசார் தொல்லியல் துறையிடம் விளக்கி அனுமதி பெறுவதில் தாமதமாகிறது. கடலில் சிக்கியவரை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்ல, அவசர வாகனங்களை கோவில் பகுதி வரை அனுமதிப்பது அவசியமானது.
அதற்கு, அங்கிருந்து கடற்கரை செல்ல, உட்புற வாயிலை எப்போதும் திறந்து வைத்திருப்பது அவசியம். இதை உணர்ந்து, தொல்லியல் துறை அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.