பெங்களூரு,-இரு சக்கர வாகன பயணியரை, வழி மறித்து தங்கநகைகள் வியாபாரியிடம் 85 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து, தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டனர். 62 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரின் கலாசி பாளையாவின், நாலா சாலையில், ஜனவரி 10ல், மதியம் 3:00 மணியளவில், தங்க வியாபாரி வருண்சிங், கிருஷ்ணப்பா ஆகியோர், தங்கம் விற்ற பணத்துடன், பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பணப்பையை பைக் பகுதியில் வைத்திருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த, மூன்று நபர்கள், வருண் சிங்கின் பைக்கை வழி மறித்து, ஆயுதங்கள் காண்பித்து மிரட்டி, 85 லட்சம் ரூபாய் இருந்த பணப்பையை, பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
கலாசிபாளையா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், தனிப்படை அமைத்தனர்.
இக்குழுவினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, முகமது ஜிலான், 27, அப்துல் வஹாப் என்ற கமர், 35, பிருத்விக், 20, ஆகியோரை கைது செய்தனர். 62 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களுடன் தொடர்புடைய ஹுசேன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடுகின்றனர். மிச்ச தொகை அவரிடம் இருப்பது, விசாரணையில் தெரிய வந்தது.
புகார்தாரர் வருண் சிங், வெறும் 10 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகாரில் கூறியிருந்தார்.
கொள்ளையர்கள் கைதான பின்னரே, 85 லட்சம் ரூபாய் என்பது, தெரிய வந்தது. வருமான வரித்துறைக்கு பயந்து, தொகையை குறைத்து கூறியதை ஒப்புக்கொண்டார்.