பெங்களூரு,-பா.ஜ., - எம்.எல்.சி., பேசியதாக, 'ஆடியோ டேப்' ஒன்றை காங்., வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், 'மக்களின் குரல்' என்ற பெயரில் தன்னுடைய தேர்தல் பிரசார யாத்திரையை துவங்கியது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரான சிவகுமாரும், எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையாவும் இணைந்து வரும் 29ம் தேதி வரை ஒரே பஸ்சில் பயணிக்கின்றனர். நேற்றுடன் ஒன்பது நாள் நிறைவு பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை, மக்கள் தெரிவிக்கும் வகையிலான 'வெப்சைட்' ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இப்படி பல வியூகங்களை கையில் எடுத்து, காங்கிரஸ் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த பரபரப்புக்கு நடுவில், ஒரு ஆடியோவை காங்கிரஸ் தரப்பு 'ரிலீஸ்' செய்துள்ளது. அதாவது, 'மக்களின் ஆணையின்றி தன்னுடைய கட்சி, மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கும்' என்று பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் பேசி உள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.
ஆப்பரேஷன் தாமரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ஆடியோவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
அந்த ஆடியோவில், 'பா.ஜ., ஆட்சி அமைக்கும், ஆனால் மக்கள் ஆதரவால் கிடையாது. பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது.
ஆனால், கட்டாயமாக ஆட்சி அமைக்கும். மரத்தில் இருக்கும் போதே, மாம்பழத்தை பழுக்க வைக்க முடியும், அதே வேளையில் ரசாயன முறையிலும் பழுக்க வைக்க முடியும்' என்று பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் கூறுவது போல் உள்ளது.
இதையே ஆதாரமாக கையில் எடுத்து கொண்டு, காங்கிரஸ் கோதாவில் குதித்துவிட்டது. இந்த ஆடியோவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஆனால், இந்த ஆடியோ டேப் குற்றச்சாட்டை யோகேஸ்வர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அந்த ஆடியோவில் பேசியது, நான் கிடையாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனாலும், 'ஆடியோ டேப்' வேகமாக பரவி வருகிறது.