தண்டையார்பேட்டை,சென்னை தண்டையார் பேட்டை மண்டலம், வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், 1.36 கோடி ரூபாய் செலவில், 'டயாலிசிஸ்' சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இதில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அமைச்சர் நேரு கூறியதாவது:
சென்னையில் ஏற்கனவே, ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் மையங்கள் உள்ளன. எட்டாவதாக, வியாசர்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 டயாலிசிஸ் இயந்திரங்களுடன், டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டயாலிசிஸ் மையம் ரோட்டரி கிளப், டேங்கர் அறக்கட்டளை மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் டயாலிசிஸ், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது.
அதேபோல, பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகள் வழங்க, 736 நல்வாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள், வேகமாக நடக்கின்றன. அதேபோல, 372 இடங்களில் கழிப்பறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடக்கின்றன.
சென்னை மாநகராட்சியில், அனைத்து மக்களுக்கும் குடிநீர் எளிதாக கிடைக்கும் வகையில், வீடுதோறும் 'மெட்ரோ வாட்டர்' வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.