திருவொற்றியூர்,
தியாகராஜர் கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில், மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதப்பதால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை இருக்கும்.
கட்டட கலை மற்றும் பழமை காரணமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரும் இக்கோவிலுக்கு வருவர். இக்கோவிலின் வெளிப்புறம், ஆதிசேஷ தீர்த்த குளமும், உட்புறம் வசந்தமண்டபம் அருகே, பிரம்ம தீர்த்த குளமும் உள்ளது.
கடந்த பருவமழையின் போது, இரு குளங்களும் போதுமான அளவு தண்ணீர் தேங்கி, ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
உள்பிரகாரத்தில் உள்ள, பிரம்மதீர்த்த குளத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் வளர்ப்பு மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இரு தினங்களாக, 3 முதல் 20 கிலோ எடையிலான மீன்கள் உட்பட, பல்வேறு வகையான மீன்கள் கொத்துக்கொத்தாக செத்து மிதந்தன. இதனால், பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து, மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மீன்வளத்துறை அதிகாரிகள சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், குளத்தில் தண்ணீர் வற்றி, மீன்கள் எண்ணிக்கை அதிகம் காரணமாக, சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கலாம்.
அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, மீன்கள் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இறந்த மீன்களை, மீனவர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, கடற்கரையில் புதைக்கும் பணி தீவிரமாக நடக்கின்றன.
மேலும், கோவில் குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.