ஓட்டேரி, ஓட்டேரி அடுத்த படாளம், பென்சனர் லேண்ட், 'எப் - பிளாக்'கைச் சேர்ந்தவர் சசிகலா, 37. இவர், 10 ஆண்டுகளுக்கு முன், ஆவடி அடுத்த திருநின்றவூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், 41, என்பவரை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
கடந்தாண்டு விஸ்வநாதன், 'புது தொழில் துவங்க வேண்டும்' என, சசிகலாவின் 7 சவரன் நகையை, ஓட்டேரி இந்தியன் வங்கி கிளையில் அடகு வைத்துள்ளார். அதில் கிடைத்த பணத்தை, தன் முதல் மனைவி விஜயலட்சுமியின் வங்கி கணக்கில் போட்டுள்ளார்.
இதையறிந்த சசிகலா, தன் நகையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என, தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், விஸ்வநாதன் கண்டுகொள்ளவில்லை.
இதனால், இருவர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில், சசிகலா, 11ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தன் கணவர் மீது புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க, நேற்று முன் தினம், ஓட்டேரி போலீசார், இருவரையும் அழைத்தனர்.
அங்கு சென்ற சசிகலா, விசாரணை நடந்த போது, காவல் நிலையம் அருகே, பூச்சி மருந்தை குடித்து, 'என் நகையை மீட்டு கொடுங்கள்' என சத்தம் போட்டு, மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், சிகிச்சை பெற்று வருகிறார்.