குரோம்பேட்டை,
குரோம்பேட்டையில் கழிவு நீர், ஆக்கிரமிப்பால், குட்டைபோல மாறிவிட்ட, வீரராகவன் ஏரியை சுத்தப்படுத்த, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குரோம்பேட்டை நியுகாலனி பகுதியில், பல்லாவரம் - திருநீர்மலை உள்ளாட்சிகளின் எல்லையில் வீரராகவன் ஏரி உள்ளது. பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பரப்பளவு, 60 ஏக்கர். 1968ல், கடல்போல காட்சியளித்த இந்த ஏரி, ஒவ்வொரு மழையின் போதும் நிரம்பி, ஜி.எஸ்.டி., சாலை வரை, அதன் தண்ணீர் தொடும்.
அப்போது, ஏரியை நம்பி, குரோம்பேட்டை, கக்கலஞ்சாவடி பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது. மழை காலத்தில் அருகேயுள்ள பச்சைமலை மற்றும் கக்கலஞ்சாவடி பகுதிகளில் வெளியேறும் தண்ணீர், வீரராகவன் ஏரியில் கலக்கும். 1980க்கு பிறகு, இந்த ஏரியை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
அதை சாதகமாகப் பயன்படுத்தி லட்சுமி புரம், நியுகாலனி, கக்கலஞ்சாவடி என சுற்றி ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டினர்.
மற்றொரு புறம், லட்சுமி புரம், துர்கா நகர், நியுகாலனி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அரசு மருத்துவமனை கழிவு நீர், ஏரியில் பல ஆண்டுகளாக கலக்கிறது.
தொடர் ஆக்கிரமிப்பால், ஏரியின் மதகு காணாமல் போய்விட்டது. கலங்கல் சுருங்கிவிட்டது. வரத்து கால்வாய்கள் மாயமாகிவிட்டன. தற்போது, இவ்வேரி, குட்டையாக சுருங்கி, கழிவு நீர்த் தேக்கமாக மாறிவிட்டது. முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து மூடியுள்ளது.
மெல்லமெல்ல மாயமாகி வரும் வீரராகவன் ஏரியை சுத்தப்படுத்தி, முறையாக பராமரிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.
அதனால், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.