திருப்பூர்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை, மாவட்ட கல்வித்துறை வேகப்படுத்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வினியோகிக்கப்பட உள்ளது.
கடந்த, 2022, நவ., மாதம் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு, மார்ச், 13 முதல் ஏப்., 3ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு, மார்ச், 14 முதல், ஏப்., 5ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 6 முதல், 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
முன்னதாக பிப்., மாதம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெறும். பொதுத்தேர்வுக்கு இன்னமும் ஒன்றரை மாதம் மட்டுமே இருப்பதால், தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர், தேர்வு நடக்கும் பள்ளிகள், தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியை மாவட்ட கல்வித்துறை துவக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 15 ஆயிரத்து, 640 மாணவர், 15 ஆயிரத்து, 361 மாணவியர் என 31 ஆயிரத்து, 001 பேரும், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 11 ஆயிரத்து, 106 மாணவர், 13 ஆயிரம், 450 மாணவியர் என, 24 ஆயிரத்து, 556 பேரும், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 11 ஆயிரத்து, 747 மாணவர், 13 ஆயிரத்து, 868 மாணவியர் என மொத்தம், 25 ஆயிரத்து, 615 பேர் என மொத்தம், 81 ஆயிரத்து, 172 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுத்தேர்வு எழுதுவோருக்கான 'ஹால் டிக்கெட்', வரும், 31ம் தேதிக்கு முன் வழங்கப்படும். பிப்., முதல் வாரத்தில், தேர்வு நடக்கும் தேர்வுகூடம், பணியில் ஈடுபடும் அலுவலர் தேர்வு செய்யப்படுவர்.
ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, அம்மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.