செய்யூர்:செய்யூர் அருகே, பவுஞ்சூர் சாலையில், வடக்கு செய்யூர் கிராமத்தின் பேருந்து நிறுத்த நிழற்குடை, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதிகளுக்கு, தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், பழுதடைந்து, பேருந்து நிறுத்த நிழற்குடையின் மேல், ஆலமரத்தின் விழுதுகள் படர்ந்து வேரூன்றி இருந்தது. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி, நிழற்குடை இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, செய்யூர் ஊராட்சி சார்பாக, நிழற்குடையின் மேல் படர்ந்திருந்த ஆலமரத்தின் விழுதுகள், தற்காலிகமாக அகற்றப்பட்டன.
லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:
பேருந்து நிறுத்த நிழற்குடையில், ஆலமரத்தின் விழுதுகள் படர்ந்ததால், மேல் தளம் சேதமடைந்துள்ளது. ஆகையால், புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.