அவிநாசி:'உர மேலாண்மை குறித்து, விவசாயிகள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்,' என, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், அனைத்து துறை அலுவலர்களுடன் சிறப்பு முகாம் மற்றும் ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், சேவூர் அருகே போத்தம்பாளையம் கிராமத்தில் நடந்தது.
இதில், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள், வழங்கப்பட்டன. விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், அரசு திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துண்டு பிரசுரம் வழங்குதல், உழவன் செயலியை விவசாயிகளின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, இடுபொருள் தேவையை பதிவு செய்வது, பயிர்க்கடன் பெறுவதற்கான விண்ணப்பம் பெறுவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், சிறு தானியங்களை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படும்; கோடை உழவு, விதை நேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக் கொல்லி பயன்பாடு உள்ளிட்ட உர மேலாண்மை குறித்து, விவசாயிகள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.
முகாமில், தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் நடராஜன், மண்டல துணை பி.டி.ஓ., நவமணி, கூட்டுறவு சார் பதிவாளர் நாகமணி, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் மோகனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குமரகுரு வேளாண் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் முகாமில் பங்கேற்றனர்.