அம்பத்துார், அம்பத்துார் தொழிற்பேட்டை அடுத்த அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனி, கிருஷ்ணா சாலையைச் சேர்ந்தவர் ஜெயராமன், 29. இவர், 'ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், தன் ஆட்களுடன், ஜெயராமனை காரில் கடத்திச் சென்றார்.
அதன்பின், அவர் மொபைல்போனில், ஜெயராமனின் மனைவி சிவரஞ்சனியிடம், 27, 'உன் கணவரை நாங்கள் தான் கடத்தினோம். அவரை விடுவிக்க, 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என கூறியிருக்கிறார். இதுகுறித்து, சிவரஞ்சனி, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
விசாரித்த தனிப்படை போலீசார், 'மொபைல்போன் சிக்னல்' மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, சென்னை, சாலிகிராமம் அருகே காரை மடக்கி பிடித்தனர்.
அங்கிருந்த ஜெயராமனை பாதுகாப்பாக மீட்ட போலீசார், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ், 40, அவரது கூட்டாளிகளான திவாகர், 40, பொன்னேரியைச் சேர்ந்த ஹேமநாதன், 41, பஞ்செட்டியை சேர்ந்த பாலாஜி, 38, அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 36, அம்பத்துாரைச் சேர்ந்த தினேஷ்குமார், 23, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், ஜெயராமன், தொழில் தேவைக்காக சிலரிடம், பணம் கடன் வாங்கியிருக்கிறார். அதே போன்று, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன், அம்பத்துாரில் இடம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, தேவராஜிடமும் பணம் வாங்கி இருக்கிறார்.
ஆனால், நிலம் வாங்கிக் கொடுக்காத நிலையில், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை பணம் கேட்டும், கிடைக்காததால், ஆத்திரமடைந்த தேவராஜ், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஜெயராமனை கடத்தியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய 'மாருதி சுசூகி' கார் மற்றும் ஒரு 'ஹோண்டா ஆக்டிவா' ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.