சென்னை, சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்ட, தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க, இன்றும், நாளையும் எட்டு இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகருக்கான, 2027 முதல் 2046 வரையிலான காலத்துக்கு மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக, தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது.
தொலைநோக்கு ஆவணத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்தது. சி.எம்.டி.ஏ., சார்பில், https://cmavision.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் டிச., 17, 18ம் தேதிகளில், மணலி, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம் ஆகிய ஐந்து மண்டலங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜன., 7, 8ம் தேதிகளில், திரு.வி.க., நகர், சோழிங்கநல்லுார், வளசரவாக்கம், பெருங்குடி, தேனாம்பேட்டை, அம்பத்துார், கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.