பல்லாவரம்:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்சார் ஆலம், 27. திரிசூலம் பகுதியில் தங்கி, கட்டட வேலை செய்கிறார்.
நேற்று முன்தினம், பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில், சங்கர் என்பவர் வீட்டின், இரண்டாவது மாடியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, துப்பாக்கி குண்டு ஒன்று, அவரது வலது காலின் கணுக்கால் பகுதியில் பாய்ந்தது.
வலியால் அலறி துடித்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு, பாரதி நகர், இரண்டாவது தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது தெரியவந்தது. சிகிச்சை மூலம் அந்த குண்டு அகற்றப்பட்டது.
போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். அதில், திரிசூலம் மலையில் சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பயிற்சியின் போது, துப்பாக்கி குண்டு ஒன்று தவறி, இன்சார் ஆலம் காலில் பாய்ந்ததும் தெரியவந்தது.
திரிசூலம் மலையில், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடும் பயிற்சி, நேற்று முன்தினம் துவங்கியது.
தொழிலாளி காலில் குண்டு பாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து, இப்பயிற்சி, நேற்று நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2018, ஜூலை மாதம், ஈஸ்வரி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, துப்பாக்கி குண்டு ஒன்று, அவரது காலில் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.